பாடல் எண் :1797
அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே
.

8
பொ-ரை: "யாம் அழகியவர்கள்; இளையவர்கள்" எனும் ஆசையால் ஒழுகி, உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக.
கு-ரை: அழகியோம் - நாம் அழகாக இருக்கின்றோம். இளையோம் - இளமைத்தன்மை உடையவர்களாக இருக்கின்றோம். ஆசையால் - நிலையாத இவ்விரண்டையும் பெற்றுக் களிக்கும் ஆசை
யினாலே. ஒழுகி - தவறான வழிகளில் நடந்து. ஆவி - உயிர். உடல் விடுமுன்னமே - உடலை விட்டு நீங்கும் முன்பாகவே. நிழலதார் பொழில் - நிழல் பொருந்திய சோலை.