|
பாடல் எண் :1800 | தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி அங்க லக்கழித் தாரருள் செய்தவன் கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு மங்க லக்குடி மேய மணாளனே. |
| 1 | பொ-ரை: மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன், தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன். கு-ரை: தங்கலப்பிய - தமக்குள்கலந்த. தம்மோடு உறவு கலந்தவனாகிய. அங்கு - அவ்விடத்திலேயே. அலக்கழித்து - சின்னாபின்னம் செய்து. ஆரருள் செய்தவன் - பின்னர் அவனுக்குப் பெறுதற்கரிய திருவருளைச் செய்தவன். கொங்கு - தேன். அலர் - மலர். குழல் - கூந்தல். கொம்பனையாள் - பூங்கொம்பு போன்றவளாகிய உமை. |
|