|
பாடல் எண் :1801 | காவி ரியின் வடகரைக் காண்தகு மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித் தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத் தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே. |
| 2 | பொ-ரை: காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில், திருமாலாகிய தேவும், பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன். கு-ரை: காண்தகு - காணத்தக்க. மா - வண்டு. விரியும் - படரும், அல்லது மாமரங்கள் விரிந்து வளரும் என்றோ அடர்த்தியால் கருமை விரியும் என்றோ கொள்க. தேவரி - தெய்வத்தன்மை பொருந்தியவராகிய திருமால். தூஎரி - தூய நெருப்பு. தன்கண் அழுக்கு இன்றி இருப்பது பிறிதில்லை ஆகலின் தூஎரி என்றார். சுடர்ச்சோதி - ஒளியையுடைய விளக்கு. உள்சோதி - ஆன்ம சைதன்யத்தினுள் நின்று செலுத்தும் சிவசைதன்யன். உயிர்க்குயிரானவன் என்றபடி. |
|