பாடல் எண் :1805
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே
.

6
பொ-ரை: நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும், சொல்லும் வல்லமை உடையாரும், நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர்.
கு-ரை: மன்னு - நிலைபெற்ற. சீர் - சிறப்புப் பொருந்திய. மன்னிய - எழுந்தருளிய. பின்னு - முறுக்கிய. வார் - நீண்ட. உன்னுவார் - நினைப்பவர்.
நன்னெறி - சிவஞானம். தொடர்வு எய்த - காப்பு உண்டாக. துன்னுவார் - அடைவார். திருவைந் தெழுத்தை ஓதுவார் சிவஞானத் தொடர்புபெறுவர் என்க.