|
பாடல் எண் :1807 | வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி விண்ட தாதையைத் தாளற வீசிய சண்ட நாயக னுக்கருள் செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே. |
| 8 | பொ-ரை: வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான், மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன். கு-ரை: வண்டுசேர் பொழில் - வண்டுகள் மொய்க்கும் சோலை. விண்ட - தன் எண்ணத்தின் மாறுபட்ட. தாதை - தந்தை. தாள் அற - கால் இருதுண்டாக. வீசிய - வெட்டிய. துண்டமாமதி - பிறைமதி. |
|