|
பாடல் எண் :1815 | கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் திறம்பி யூர்வன மற்றும் பலவுள குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை எறும்பி யூரரன் செய்த இயற்கையே. |
| 6 | பொ-ரை: சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில், மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது. கு-ரை: கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று. ஊர்வன - நம்மை ஊர்ந்து கொண்டிருப்பன. ஐந்து - ஐம்பொறிகள். காயத்தில் - உடலில். திறம்பி ஊர்வன - மனத்தொடு பிறழ்ந்து செல்வன. மற்றும் பலவாவன - அந்தக்கரணங்கள் முதலியன. குறும்பி - மலமூத்திராதி உடலழுக்கு. ஊர்வதொர் - பொருந்திதொரு. கூட்டகத்து - உடலிடத்துள். இட்டு - அடைத்து. |
|