|
பாடல் எண் :1828 | உருகி யூன்குழைந் தேத்தி யெழுமின்நீர் கரிய கண்டன் கழலடி தன்னையே குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா இரவு மெல்லியு மேத்தித் தொழுமினே. |
| 9 | பொ-ரை: திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி, உடல் குழைந்து ஏத்தி எழுவீராக. நம் செழுங்கோயிலாகிய குரக்குக்காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக. கு-ரை: உருகி - மனமுருகி. ஊன்குழைந்து - உடல்வாடி. ஏத்திஎழுமின் - வாழ்த்திச் செல்லுங்கள். குராவனம் குரவனம் என்றாயது. குராமரங்கள் நிறைந்த சோலை. ஆழ்ந்த வளவிய கோயில் என்க. குரவன் அம்செழுங் கோயில் எனப்பிரித்து குருநாதனாகிய பெருமான் எழுந்தருளிய அழகிய வளவிய கோயில் எனலுமாம். எல்லி - பகல். |
|