பாடல் எண் :1835
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவா
சொல்லி டீர்நுந் துயரங் கள்தீரவே.

6
பொ-ரை: கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில்இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.
கு-ரை: கல்வியாகவும், ஞானமாகவும், கலைப்பொருளாகவும் ஆயவன் என்க. கல்வி - நூல்களும் அறிதற்குரியனவும். ஞானம் - கல்வியால் விளையும் அறிவு. கலைப்பொருள் - கல்வி முதலிய கலைகளால் உணரப்படும் பொருள். எல்லி - பகல். இசைவு ஆனவா - நமக்குப் பொருந்தியவாறு. சொல்லிடீர் - அவன் புகழைச் சொல்லுவீராக. தீர - நீங்க.