பாடல் எண் :1839
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாம நவிலவே.

1
பொ-ரை: சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும்; பொய்கெடும்; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும்.
கு-ரை: பூரியா - நிறைந்து, பெருகி. புண்ணியம் பூரியா வரும். பொய் - புண்ணியத்துக்கு மறுதலையாகிய கீழ்மை. கூரிதாய அறிவு - கூர்மையான நுண்ணறிவு. கைகூடிடும் - உண்டாகும். சீரியார் - சிறந்தவர். பயில் - வாழ்கின்ற. நாரிபாகன் - பார்வதிதேவியைப் பாகமாக உடையவன். நாமம் - திருப்பெயர். நவில - சொல்ல. செந்நெறி - கோயில் திருப்பெயர். செம்மை நவிலவரும் எனக் கூட்டுக.