பாடல் எண் :1842
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.

4
பொ-ரை: ஊமைகளே! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக.
கு-ரை: மாடு - செல்வம். மயக்கினில் வீழ்ந்து - நில்லாதவற்றை நிலையின என்றுணரும் அறியாமையில் விழுந்து. எய்த்தும் - வருந்தியும். ஊமர்காள் - ஊமைகளே; பேசுதற்குரியவற்றைப் பேசாதவர்; சொல்லும் கருவியிருந்தும் சொல்லாதவர். சேடர் - அறிவால் பெருமையுடையவர். வாழ் - வாழ்கின்ற. ஆடலான்தன் - ஐந்தொழில் ஆடவல்லானாகிய இறைவனது.