|
பாடல் எண் :1848 | பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் வருந்த வூன்றி மலரடி வாங்கினான் திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. |
| 10 | பொ-ரை: பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும், திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை. கு-ரை: பொருந்து - நிலத்தில் ஆழமாய்ப் பொருந்திய. நீண்மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலையை. பிடித்து - பற்றி. ஏந்தினான் - தூக்கியவனாகிய இராவணன். வருந்த - உடல் வருந்த. வாங்கினான் - அவனுக்குக் கருணை செய்வதற்காக மீளவும் எடுத்தான். இடர் - துன்பம். |
|