|
பாடல் எண் :1849 | சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே. |
| 1 | பொ-ரை: சங்கு வளையல்கள் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும் யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து எய்தும். கு-ரை: சங்கு உலாம் - சங்கினால் செய்த வளையல்கள் இங்கு மங்கும் அசைகின்ற. முன்கை - மணிக்கட்டினை உடைய. தையல் - பார்வதி. மதவேழம் - மதங்கொண்டயானை. குலாம் - விளங்குகின்ற. வெகுண்டவன் - சினந்து உரித்துப் போர்த்தவன். கொங்கு - தேன். உலாம் - நிறைந்த. எங்கிலாததோர் இன்பம் - எங்கும் இல்லாததொரு பேரின்பம். "செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா" (தி.8.திருவாசகம்-171.) எய்தும் - தானே வந்து அடையும்.
|
|