பாடல் எண் :1850
வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே
.

2
பொ-ரை: நாள்தோறும் நீர் மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக் கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக் கழிவீர்; கூறினேன்.
கு-ரை: வாடி - பலவகையாலும் வருந்தி. வாழ்வது - வாழ்வதாகிய வாழ்க்கை. என்னாவது - என்ன பயனைத்தருவது. மாதர்பால் - பெண்களினிடத்து; கூடிவாழ்வது என்னாவது என்க. ஓடி - விரைந்து சென்று. வாழ்வினை - உண்மையான வாழ்க்கையின் செயலை. உள்கி - நினைந்து. கோடிகாவன் - கோடிகா என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவன். கூறிரேல் - சொல்லவில்லையானால். கூறினேன் - நிச்சயமாகச் சொன்னேன். கழிதிர் - பயனின்றிக் கழிந்தொழிவீர். பாடி காவல் - அரச நீதி பிழைத்தாரை வழக்குநாடி அரசன் நிறுத்தும் தண்டத்தொழில். "நெறியின்வழீ இயினாரை வழக்குவினாய் ஒப்ப நாடிச் செய்யும் தண்டத்தொழிலுணர்த்துவதோர் ஏசொல்" என்பது சிவஞான மாபாடியம். ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனதாக்கினையாகலான் என்க.