பாடல் எண் :1857
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற் புள்ளிருக்கு வேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.

2
பொ-ரை: விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு.முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.
கு-ரை: மாற்றம் - கூற்றுவனுக்குச் சொல்லும் மறுமொழி. நம்மைக் கொல்லவருங்காலையில் அவனைப் போ எனச் சொல்லும் விலக்கு. ஒன்று - யாதொன்றையும். அறியீர் - அறியாதவர்களே. மனைவாழ்க்கை போய் - மனைவியோடு வாழும் இல் வாழ்க்கை அழிந்து. கூற்றம் - வாழ்நாளைக் கூறுபடுத்தும் தெய்வம். கொள்வதன் முன்னமே - பற்றிக்கொண்டுபோவதற்கு முன்பே. புள்ளிருக்கு வேளூர்ப் போற்ற வல்லீரேல் - வேளூரில் எழுந்தருளிய வைத்திய நாதப் பெருமானை வணங்குவீரேயானால், சீற்றம் - நம்மைச் சீறும் கூற்றுவனது சீற்றம். தேய்ந்து அறும் - சிறிது சிறிதாகக் குறைந்து நீங்கும்.