|
பாடல் எண் :1858 | அரும றையனை ஆணொடு பெண்ணனைக் கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர் உருகி நைபவ ருள்ளங் குளிருமே. |
| 3 | பொ-ரை: அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும். கு-ரை: அருமறையனை - அரிய வேதங்களின் வடிவாய் இருப்பவனை. ஆணொடு பெண்ணனை - ஆணும் பெண்ணுமாய் இருப்பவனை. மாதொரு கூறனை என்றபடி. கருவிடம் - கரிய நிறத்துவிடம். மிக - மிகுதியாக. எம் - எமது. புரிவெண்ணுலனை. முப்புரியாக அமைந்த வெண்மையான பூணூல் அணிந்தவனை. உருகி நைபவர் - மனம் உருகிக்கனிபவர். உள்ளம் - மனமானது. |
|