பாடல் எண் :1859
தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே
.

4
பொ-ரை: தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.
கு-ரை: தன்னுருவை - தனது திருவுருவத்தை. ஒருவர்க்கு அறியவொணா - திருமால், பிரமன் முதலாகிய யாரும் அறிய முடியாத. யாரும் அறியமுடியாதவாறு தனது திருவுருவத்தை உடையவன் என்க. மின் னுருவன் - மின்னல்போன்று ஒளிவடிவத்தினன். பொன்னுருவன் - அழகிய வடிவுடையவன். என்ன வல்லவர்க்கு - என்று சொல்ல வல்லவர்களுக்கு.