|
பாடல் எண் :1863 | உள்ள முள்கி யுகந்து சிவனென்று மெள்ள வுள்க வினைகெடு மெய்ம்மையே புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. |
| 8 | பொ-ரை: உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று "சிவன்" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக. கு-ரை: உள்ளம் உள்கி - மனத்தால் மீண்டும் மீண்டும். உகந்து - மகிழ்ந்திருந்து. சிவன் என்று மெள்ள உள்க - சிவன் சிவன் என்று பரபரக்காது சிந்திக்க. வினைகெடும் - நம் வினைப்பற்றுக் கெடும். மெய்ம்மையே - இது உண்மையேயாகும். புள்ளினார் - சம்பாதி சடாயு என்ற பறவைகளின் வடிவாய் இருந்தோர். பணி - வழிபாடு செய்த. |
|