|
பாடல் எண் :1864 | அரக்க னார்தலை பத்து மழிதர நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர் விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே. |
| 10 | பொ-ரை: இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும். கு-ரை: அரக்கனார் - இராவணன். ஆர், இழித்தற்பொருளில் வந்தது. அழிதர - அழிய. நெருக்கி - நெரித்து. மாமலர்ப்பாதம் - மலர்களிற் சிறந்த தாமரை மலர்போன்ற திருவடி. நிறுவிய - மீள அவன் உய்யும்படி நிறுத்திய. பொருப்பினார் - கயிலைமலையார். வீடும் - அழியும். |
|