|
பாடல் எண் :1865 | வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக் கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. |
| 1 | பொ-ரை: நெஞ்சே! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை; நீ கெடுவாய், பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக. கு-ரை: வானம்சேர் - ஆகாயத்தைச் சேர்ந்துள்ள. மைந்தன் - இளையன், வலியன். நெஞ்சே நீ - மனமே நீ. கெடுவாய் - கெட்டுவிடுவாய். நினைகிற்கிலை - நினையாமல் இருக்கின்றாய். நீ நன்மையடைதற் பொருட்டுக் கூறவில்லையே ஆதலால் கெடுவாய் என இயைத்துக் கூறுக. ஆனஞ்சு - பஞ்சகவ்வியம். கோன் - தலைவனாகிய. அன்பிலாலந்துறை இறைவன் திருப்பெயரைப் பலகாலும் சொல் என்பதாம். |
|