பாடல் எண் :1866
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே
.

2
பொ-ரை: அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி, உலககாரணரும், கருத்தில் உள்ளவரும்,பிரமகபாலம் கொண்ட கையினரும், யானை உரிபோர்த்த மணாளரும், வேதப்பொருள் ஆயவரும் ஆவர்.
கு-ரை: காரணத்தர் - உலகின் நிமித்த காரணராயிருப்பவர். கருத்தர் - எல்லாவற்றிற்கும் மூலகாரணர். கபாலியார் - பிரமனது மண்டையோட்டைக் கையின்கண் ஏந்தியவர். வாரணத்து - யானையினது. உரி -தோல். ஆரணப்பொருள் - வேதங்களின் பொருளாய் விளங்குபவன். நாரணன் - திருமால். ஒருநம்பி - ஒப்பற்ற சிறந்த ஆண் மகனாயிருப்பவன்.