பாடல் எண் :1876
பிரமன் மாலறியாத பெருமையன்
தரும மாகிய தத்துவ னெம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

2
பொ-ரை: அறிவற்ற நெஞ்சமே! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும், தருமவடிவாகிய தத்துவ வடிவினனும், எம்பிரானும், பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடுமுடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக.
கு-ரை: தருமமாகியதத்துவன் - அறவடிவாகியதத்துவன். கருமம் - செய்யவேண்டிய அவசியச் செயல்.