|
பாடல் எண் :1882 | மந்த மாகிய சிந்தை மயக்கறுத் தந்த மில்குணத் தானை யடைந்துநின் றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே. |
| 3 | பொ-ரை: மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே! ஈசனே! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும். கு-ரை: மந்தமாகிய-அறியாமையால் ஏற்படும் மந்தத் தன்மையாகிய சிந்தை மயக்கு -மன மயக்கத்தை. அறுத்து - நீக்கி. அந்தம்இல்- முடிவில்லாத. வல்லிரேல் -ஏத்தும் வன்மையையுடையீரானால். வந்து நின்றிடும்-வெளிப்பட்டு வந்து தோன்றும். |
|