பாடல் எண் :1883
உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

4
பொ-ரை: கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன், உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன்.
கு-ரை: உள்ளம் உள்கலந்து-உள்ளம் முழுமையும் அவனுக்கே இடமாகக்கொண்டு; மேற்போக்கான நினைப்பு பயனற்றது ஆதலின் உள்கலந்து என்றார். ஏத்தவல்லார்க்கலால்-வணங்கவல்லார்க்கே அல்லாமல். கள்ளம் உள்ளழி -வஞ்சகத்தன்மை உள்ள இடத்து. கசிவானலன் - அருள் செய்யமாட்டான். வெள்ளம் -கங்கை. விரவும் -கலந்தணிந்த.