பாடல் எண் :1893
கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடு மிறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.

4
பொ-ரை: முல்லைநிலத்து விடையேறிய அரசனும், இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய, கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும்.
கு-ரை: கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. மால்விடை - திருமாலாகிய எருதினை. ஏறிய - ஊர்தியாக ஏறிய. கோவினை - தலைவனை. எல்லி - இரவு. மா - சிறந்த. கல்லினார்மதில் - கற்களினால் பொருத்திக்கட்டப்பட்ட. சோரும் - அழியும்.