பாடல் எண் :1897
அந்த மில்புக ழாயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே
.

8
பொ-ரை: ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே! "ஈசனே" என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும்.
கு-ரை: அந்தமில் - கெடுதல் இல்லாத. புகழ் - புகழையுடைய. ஆயிழையார் - அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்கள்; பார்வதி எனலுமாம். எந்தை - என்னுடைய தந்தை. ஈசன் - தலைவன். கந்தம் - மணம். திண்ணம் - நிச்சயம். "கௌரிநாயக, நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து பெரும்பதம் பிழையா வரம் பலபெற்றோர் இமையாநெடுங்கண் உமையாள் நங்கையும் தாரகற்செற்ற வீரக்கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்...". (திருவிடை - மும்மணி.28)