|
பாடல் எண் :1900 | மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம் கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது ஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனம் காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. |
| 1 | பொ-ரை: செல்வத்திடத்து மகிழ்ந்து உறைவீர்; கேட்டுப் பள்ளிகண்டீர். உடம்பை விட்டு உயிர் ஓடலுறுவதற்கு முன்பு காட்டுப்பள்ளியிறைவன் திருவடிகளைச் சேர்வீராக. கு-ரை: மாட்டுப்பள்ளி - செல்வம் நிறைந்த இருக்கைகள். உறைவீர்க்கெலாம் - தங்கி இறையுணர்வின்றியிருப்போர் எல்லாருக்கும். இது கேட்டுப்பள்ளிகண்டீர் - இது கேடுதரும் இருக்கை என்பதை உணருங்கள். கெடுவீர் - நிலையாத மனைவாழ்க்கையை நம்பியிருப்பின் கெட்டுவிடுவீர். இது என்பதைக் கேட்டுப்பள்ளி என்பதனுடன் கூட்டுக. ஓட்டுபள்ளி - ஓடுகின்ற வீடு. விட்டு - பிரிந்து. ஓடலுறாமுனம் - உயிர்செல்வதற்குமுன்பே. காட்டுப் பள்ளியுளான் கழல் - திருக்காட்டுப்பள்ளி என்னும் தலத்து இறைவன் திருவடிகளை. சேர்மின் - அடைந்து வழிபடுங்கள். |
|