|
பாடல் எண் :1905 | அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே. |
| 6 | பொ-ரை: அடும்பும், கொன்றையும், வன்னியும், ஊமத்தமுமாகிய மலர்கள் சூடியிருக்கும் புனைதல் செய்யப்பட்ட சடையுடைய தூமணிச் சோதியானும், கடம்பணிந்த முருகன் தந்தையும் ஆகிய பெருமானே உடம்பை உடையவர்க்கெல்லாம் உறுதுணை ஆவான்; ஆதலின் காட்டுப்பள்ளியையே கருதுவீர்களாக. கு-ரை: அடும்பு - அடம்பமலர். துடும்பல் - நிறைந்திருத்தல். தூமணிச்சோதி - தூயமணியினது ஒளியை உடையவன். கடம்பன் - கடம்பமலர்மாலை சூடிய முருகன். தாதை - தந்தை. கருதும் - வழிபட்ட. உடம்பினார்க்கு - உடலோடு கூடி வாழ்பவர்களுக்கு. உறுதுணையாகும் - உற்ற துணையாகவுதவும். |
|