|
பாடல் எண் :1910 | மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறு மிறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. |
| 1 | பொ-ரை: சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர். கு-ரை: மட்டு - தேன்பொருந்திய. வார் - நீண்ட. மட்டுவார் குழலாள், அம்பிகையின் திருப்பெயர். மால்விடை - திருமாலாகிய இடபம். இட்டமா - விருப்பமாக. உகந்து - மகிழ்ந்து. கட்டு - பந்தபாசமாகிய பிணிப்புக்கள். இன்னருளே - இனிய திருவருளையே; நீத்தவர்க்கே அருள்செயும் எனலுமாம். சிட்டர் - சிஷ்டாசாரம் உடையவர். |
|