பாடல் எண் :1911
அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்தொழு தேத்து மரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்தொழ அங்கிருப் பார்களே
.

2
பொ-ரை: திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும்அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப்பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.
கு-ரை: அரி அயன் தலைவெட்டி - திருமால் பிரமன் இவர்களின் தலைகளை வெட்டி. (அவற்றை) வட்டாடினார் - வட்டமாகச் சுழற்றிச் செண்டாடினார். வட்டம் - வட்டு என நின்றது. அம்மானைக் காய்களாகக்கொண்டு அம்மானை ஆடினார். சர்வசங்கார காலத்துத் திருமால் பிரமர் முதலானாரையும் அழிப்பர் என்பது பொருள். அல்லது திருமாலை, நரசிங்க அவதாரமெடுத்த காலையில் அழித்ததையும், பிரமன் தலையைக் கொய்ததையும் குறித்ததாகவும் கொள்ளலாம். அரிய அயன் என்று கொண்டு அரியவனாகிய பிரமன் என்று மட்டும் கொண்டு பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றைக் கொய்த இறைவனது திருவிளையாடலைக் குறித்தது எனலுமாம். அரியயன் தொழு தேத்தும் - திருமாலும் பிரமனும் தொழுது வணங்கும். அரும்பொருள் - தேடுதற்கரிய பொருளாயிருப்பவன். பேணுவார் - விரும்பி வழி படுவார். அங்கு - தெய்வ உலகின்கண். இருப்பார்கள்- தலைமை தோன்ற அமர்ந்திருப்பார்கள்.