பாடல் எண் :1912
ரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே
.

3
பொ-ரை: நெஞ்சே! ஐம்புலக்கள்வரால் இராப்பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!
கு-ரை: அரிச்சிராப்பகல். அரித்து இராப்பகல் எனப் பிரிக்க. இரவும் பகலும் வயிற்றுக்காக இங்குமங்கும் சென்று உணவு தேடி. ஐவரால் - ஐம்பொறிகளால். ஆட்டுண்டு - ஆட்டுவிக்கப்பட்டு. சுரிச்சிராது - வருந்தியிராமல்; சுரித்து இராது. இவ்வுலகவாழ்விலேயே சுழன்று நில்லாமல் இருப்பதற்கு. நரிச்சு - தங்கியிராமல். நடக்கும் நடக்கும் - செல்லும் செல்லும் என்க. உறுதியை வெளிப்படுத்த இருகாற் கூறினார்.