பாடல் எண் :1913
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.

10
பொ-ரை: தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.
கு-ரை: தாயுமாய் - எனக்குத் தாயாகியும்; தலத்து இறைவர் திருப்பெயர். தலைகண்ணுமாய் - மேலான பற்றுக்கோடாயும். பேயனேனையும் - பேயினது தன்மை பொருந்திய என்னையும்; உம்இழிபு குறித்தது. தேயநாதன் - பலதேசங்களுக்கும் தலைவன். நாதனார் - அடியார் தலைவர். நாசம் - கெடும்.