|
பாடல் எண் :1914 | கால பாசம் பிடித்தெழு தூதுவர் பால கர்விருத் தர்பழை யாரெனார் ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. |
| 1 | பொ-ரை: காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர், இவர் விருத்தர், இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார்; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர். கு-ரை: காலபாசம் - உயிர்களைக்கொண்டு போவதற்கு எமதூதர் வீசும் கயிறு. தூதுவர் - எமதூதுவர்கள். பாலகர் - இவர்கள் சிறு பிள்ளைகள். விருத்தர் - இவர்கள் முதியவர்கள். பழையார் - நல்ல செயல்களில் அறத்தில் பழகினவர்கள். எனார் - என்று கருதமாட்டார்கள். வாட்போக்கியார் - வாட்போக்கி என்னும் தலத்திலே எழுந்தருளிய இறைவனுடைய. சீலம் - தூய்மையை. ஆர்ந்தவர் - மனத்தால் எண்ணியவர். செம்மையுள் நிற்பர் - எமதூதர்க்கும் அஞ்சாது செம்மையான சிவநெறியிலே எஞ்ஞான்றும் வாழ்வர். |
|