பாடல் எண் :1918
மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி யுருகுமென் னுள்ளமே.

5
பொ-ரை: மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே, கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும்.
கு-ரை: மாறுகொண்டு - பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து. வளைத்துஎழு - எங்கு இருந்தாலும் உயிர்களை வளைத்துப் பிடித்துப் புறப்படுகின்ற. வேறுவேறு படுப்பதன் முன்னம் - உயிரையும் உடலையும் வேறுவேறாய்ப் பிரிப்பதன் முன்பாக. ஊறி ஊறி - அன்பு சுரந்து சுரந்து.