பாடல் எண் :1924
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

1
பொ-ரை: பட்டமணிந்த நெற்றியினரும், பாயும் புலியின் தோலை உடுத்தவரும், நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும், உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகியவார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக.
கு-ரை: பட்டநெற்றியர் - பட்டமணிந்த நெற்றியினை உடையவர். பாய்புலித்தோலினர் - பாய்கின்ற புலியினது தோலை அணிந்தவர். நாடொறும் நட்டம் நின்று நவில்பவர் - நாள்தோறும் நின்று நடனம் இயற்றுபவர். வட்டவார்சடை - வட்டமாகக் கட்டிய நீண்ட சடையினை உடையவர். வண்மை - தன்மை.