பாடல் எண் :1926
புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே
.

3
பொ-ரை: புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும், எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச்சினந்தவரும், சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர்; காண்பீராக.
கு-ரை: ஆடரவு - ஆடுகின்ற பாம்பு. ஆட்டும் - ஆடச்செய்யும். புனிதனார் - தூயவர். தெற்றினார் - உலகங்களையெல்லாம் அழித்து வந்தவராகிய (திரிபுராரிகளின்). புரம் - கோட்டைகளை. தீயெழ - நெருப்புப்பற்ற. செற்றவர் - அழித்தவர். சுற்றினார் மதில் - சுற்றிலும் பொருந்திய மதில்கள். பற்றினாரவர்பற்று அவர் - நிலையாகக் கொண்டவர்களுடைய பற்றுக்கோடு அவரே.