|
பாடல் எண் :1927 | மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை முத்தர் முக்கணர் மூசர வம்மணி சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே. |
| 4 | பொ-ரை: ஊமத்தமலரும், பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும், முக்குணங்களை உடையவரும், ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும், தீயின்வண்ணம் உடையவரும், பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர். கு-ரை: மத்தம் - ஊமத்தமலர். செஞ்சடைமுத்தர் - சிவந்த சடையினையுடைய முத்திக்குரியவர். முக்கணர் - மூன்று கண்களை உடையவர். மூசு அரவம் - உடலில் மொய்க்கும் பாம்பை (அணிந்த). தீவணர் - நெருப்புப்போன்ற சிவந்த நிறத்தை உடையவர். வித்தர் - வித்தகர்; அறிவே வடிவானவர். விருப்பாரை விருப்பர் - தன்னை விரும்புவாரை விரும்புபவர். |
|