பாடல் எண் :1930
சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.

7
பொ-ரை: சுண்ணம் பூசியவரும், சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும், விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர், நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர்.
கு-ரை: சுண்ணத்தர் - திருநீற்றுப்பொடி அணிந்தவர். சுடுநீறு - சாம்பல். உகந்து - மனமகிழ்ந்து. ஆடலார் - ஆடுபவர். விண்ணத்து - ஆகாயத்தே உள்ள. அம்மதி - அழகிய சந்திரன். மண்ணத்தம்முழவு - மார்ச்சனையிடப்பட்ட ஒலி பொருந்திய முழவு. வண்ணத்து அம்முலை - நல்ல நிறத்தோடு கூடிய அழகிய தனங்கள். உமைவண்ணர் - உமையை ஒரு கூற்றிலே பொருந்திய தன்மையர்.