|
பாடல் எண் :1933 | கடுத்த மேனி யரக்கன் கயிலையை எடுத்த வன்னெடு நீண்முடி பத்திறப் படுத்த லும்மணஞ் சேரி யருளெனக் கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே. |
| 10 | பொ-ரை: ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்தபோது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்றுவிழச்செய்தலும், "மணஞ்சேரி இறைவா! அருள்வாயாக" என்று அவன்கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும், நாமத்தையும் கொடுத்தனன் பெருமான். கு-ரை: கடுத்த - வெறுக்கத்தக்க. மேனி - உடல். அரக்கன் - இராவணன். நெடுநீண்முடி - மிகப்பெரிய நீண்ட திருமுடி. இற - நொறுங்க. படுத்தலும் - செய்தலும். மணஞ்சேரி அருள் என - மணஞ்சேரி இறைவனே அருள்செய்வாய் என்று வேண்ட. கொற்றவாளொடு நாமம் - வெற்றிபொருந்திய சந்திரகாசம் என்ற வாளையும் இராவணன் என்ற திருப்பெயரையும். |
|