பாடல் எண் :1934
பெருக லாந்தவம் பேதைமை தீரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.

1
பொ-ரை: மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம்; அறியாமை தீரலாம்; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம்; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம்.
கு-ரை: தவம் பெருகலாம் - தவம் பெருகுதல் உண்டாகும். வணங்கவே தவம் பெருகல் ஆகும். சிந்தை திருத்தல் ஆகும், பருகல் ஆகும் என்க. பேதைமை - அறியாமை. தீரலாம் - நீங்குதல் உண்டாகும். திருகல் - மாறுபட்ட எண்ணம். சிந்தை - மனம். திருத்தலாம் - அம்மாறுபாட்டுத் தன்மையை நீக்கித் தூய்மை செய்யலாம். பரமாயதோர் ஆனந்தம் பருகலாம் - மேலானதொரு இன்பத்தை உண்ணலாம். மருகலில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளை வாழ்த்தி வணங்க இவை உண்டாகும் என்க.