பாடல் எண் :1938
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்திறம்
உன்னி யொண்கொடி யுள்ள முருகுமே
.

5
பொ-ரை: நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள்; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள்; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான்.
கு-ரை: செவிலி கூற்று. இன்னவாறு என்பது - இன்ன தன்மையினால் (இப்பெண் கைவளை சோரக் கண்ணீர் சொரிதலாகிய) இது நிகழ்ந்தது என்பது. உண்டு - ஓர் காரணம் இருக்கிறது. அறியேன் - அது இன்னது என்பதை நான் அறியாதவளாயிருக்கிறேன். இன்று - இற்றைய நாள். துன்னு - நெருங்கிய. கைவளை - கையின்கண் அணிந்த வளையல்கள். சோர - கழன்றுவிழ. கண்நீர் மல்கும் - கண்களில் நீர் துளிர்ப்பாள் (இத்தலைவி). மன்னு - நிலைபெற்ற. தென் - காவிரியின் தென்கரைத் திசையில் உளதாய அல்லது அழகிய. திறம் - தன்மைகளை. உன்னி -எண்ணி. ஒண் கொடி - சிறந்தகொடி போன்றவளாகிய தலைவி. உள்ளம் - மனம்.