பாடல் எண் :1946
மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழின் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே
.

3
பொ-ரை: மும்மூர்த்திகளுள் நின்று இயலுகின்ற தொழில் மூன்றும் உடையவன்; மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவன்; மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றுடையவன்; மூன்றுபொழுதும் என் சிந்தையுள் மூழ்கியிருப்பான்.
கு-ரை: மூன்று மூர்த்தி - அரி, அயன், அரன். மூர்த்தியுள் நின்று - மூவரை அதிட்டித்து நின்று. இயலும் - செய்விக்கும். தொழில் மூன்று - படைத்தல், காத்தல், அழித்தல். மூவிலைச் சூலம் - முத்தொழிலுக்கும் தானே முதல்வனாம் அடையாளம்; "மூவிலை ஒருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்தவாறே" (ஒற்றி - ஒருபா ஒருபஃது. 5.11.12) மூன்று கண் - சூரியன், சந்திரன், அக்கினி. தீத்தொழில் - வேள்வி. "தொலையா நிதிய மெய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டியகோன்" (தி.11 ஆளுடைய பிள். திருவந்.85) தீத்தொழில் மூன்று - ஆகவனீயம், காருக பத்யம், தாக்ஷிணாக்கினி என்ற மூவேள்விகள். மூன்றுபோது - முற்பகல், நண்பகல், பிற்பகல்."முட்டாத முச்சந்தி" "சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு". (தேவாரம்.)