|
பாடல் எண் :1952 | ஒன்ப தொன்பதி யானை யொளிகளி றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே. |
| 9 | பொ-ரை: எண்பத்தொரு பதங்களில் பேசப்படுபவன். பதினெண் சிவகணங்கள் அல்லது எண்பத்தொரு யானைகள் சூழப்பெற்றவன். உடலிடத்துள்ள ஒன்பது வாயிலும் தீத்தொழிலிற் சேராதவாறு ஒன்பது ஒத்து எனக்குள் ஒடுங்குவான். கு-ரை: ஒன்பது களிறு - திசையானைகள் எட்டும் அயிராவணமும் ஆகிய ஒன்பது யானை. ஒன்பது யானை - அவற்றிற்குரிய பிடிகள். ஒளிகளி எனவும் பாடம். ஒன்பது ஒன்பது பல்கணம் - பதிணென் சிவகணங்கள். ஒன்பதாமவை தீத்தொழில் - ஒன்பது வகையான வேள்விகள். ஒத்து - ஒன்பது வாசல்களும் ஒத்து. சி.கே.எஸ். அவர்கள் கூறும் விரிவுரை பின்வருவன: "உரை ஒன்பதொத்து நின்று என்னுள் ஒடுங்கும் என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும் முடிவில் நான் என்ற அகங்கார நிலையினவாய் வந்து என்னையே சுற்றி என்னகத்தொடுங்கும் அது ஒன்பது என்னும் எண்ணினைப் போல; இஃதெவ்வாறெனில் ஒன்பதை எதனால் எத்தனை பெருக்கினும் பெருக்கிவந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் ஒன்பதே வருவதுபோல. |
|