|
பாடல் எண் :1961 | எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. |
| 8 | பொ-ரை: எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க. என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை?. கு-ரை: எழுது - நன்றாகத் தீட்டப்பட்ட. பாவை - பதுமை போன்றவர்களாகிய நல்லார் - பெண்கள். திறம் - தொடர்பின் தன்மையை. விட்டு -கைவிட்டு. தொழுது - வணங்கி. போற்றி நின்றேனையும் - தோத்திரம் சொல்லி நின்றவனாகிய என்னையும். சூழ்ந்து கொண்டு - வளைத்துக் கொண்டு நின்று. உழுத சால்வழியே உழுவான் பொருட்டு - மீண்டும் மீண்டும் பொருள் தேடும் முயற்சிகளிலே பலகாலும் ஈடுபடும் பொருட்டு. இழுதை - அறியாமை. என்படுகின்றது - என்ன துன்பத்தை அடைகிறது. உழுத சால்வழி உழுதல் உழுதல் நல்ல பயன் தருதல் இல்லை, அதுபோல; வெறுக்கப்பட்டவர்களாகிய பாவை நல்லார் திறத்தில் மீளவும் மனம் செலுத்துலால் பயனில்லை என்பதாம். |
|