பாடல் எண் :1966
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.

3
பொ-ரை: சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.
கு-ரை: ஞானத்தால் - பேரறிவால். தொழுவார் - இறைவனை வணங்குவார்கள். நான் உனை ஞானத்தால் தொழுவேனலேன் என்க. தொழுவேனலேன் - வணங்குவேனல்லேன். ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு - ஞானநெறியினால் உன்னை வழிபடுவார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு. ஞானத்தாய் - பேரறிவின் வடிவானவனே.