|
பாடல் எண் :1967 | புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர் குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே. |
| 4 | பொ-ரை: புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழுவினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்? கு-ரை: புழுவுக்கும் குணம் நான்கு - மண்ணில் வாழும் புழுக்களுக்குரிய குணங்கள் நான்கு. அவையாவன - உணவின் பொருட்டு முயலல், உண்டல், உறங்கல், இன்பதுன்பநுகர்ச்சி. எனக்கும் அதே - எனக்கும் நான்கு குணங்களே. இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை என்க. பொல்லாங்கு இவற்றின் பொருட்டுப் பிறரை வஞ்சித்தல், துன்புறுத்தல் முதலியன. புழுவினும் கடையேன் - புழுவினும் இழிந்தவனாகிய யான். புனிதன் தமர் குழுவுக்கு - தூயனாகிய அப்பெருமானது அடியார்களுக்கு. சென்றுகூட எவ்விடத்தேன் என்க. எவ்விடத்தேன் - எத்தகுதியை உடையேன். |
|