பாடல் எண் :1968
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.

5
பொ-ரை: மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தன் நிலையில் நின்று கலங்காதீர்கள். அவ்வாறு கலங்குவீர்களேயானால் ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகளே கொன்றுவிடும்.
கு-ரை: மலையே வந்து விழினும் - மலையே புரண்டு விழுந்தாலும். நிலையில் நின்று - இறைவனது அருள் நிலையிலிருந்து. கலங்கப்பெறுதிர் - கலக்கம் அடையாதீர்கள். தமர்களை - அடியவர்களை. கொலைசெய் யானைதான் - கொல்லும் தன்மையையுடைய ஐம்புலன்களாகிய யானைகள். கொன்றிடுகிற்கும் - கொன்றிடும். ஏ - வினா. கொல்லவல்லதோ என்க. தம்மநுபவம் பொதுவாக்கியது.