பாடல் எண் :1969
கற்றுக் கொள்வன வாயுள நாவு
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

6
பொ-ரை: திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன;தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவையெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?
கு-ரை: கற்றுக்கொள்வன - இறைவன் புகழை ஓதிக் கற்பதற்குரியன. வாயுள நாவுள - வாயும் நாவும் உள்ளன. இட்டுக் கொள்வன - அபிடேகம் செய்வதற்கும் சூட்டுவதற்கும்; பூவுள நீருள - நீரும் பூவும் உள்ளன. கற்றைச் செஞ்சடையான் உளன் - தொகுதியான பல சிவந்த சடைகளை உடையவனாகிய பெருமான் அருள் வழங்கக் காத்திருக்கின்றான். நாம்உளோம் - அவ்வருளைப் பெறுதற்கேற்ற பிறவியோடு நாமும் இருக்கின்றோம். நமனால் - எமனால். எற்றுக்கு - எதற்கு. முனிவுண்பது - கோபத்தை அடைவது.