பாடல் எண் :1970
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே.

7
பொ-ரை: மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.
கு-ரை: இங்கேவம் - இங்கேவாருங்கள். ஒன்று சொல்லுகேன் - பயன் தருவதாய செய்தி ஒன்று சொல்கின்றேன். கனி உண்ணவும் வல்லிரே - கனியை உண்ணும்வல்லமை உடையவர்கள் நீங்கள். புனிதன் - தூயன். பொற்கழல் - அழகிய வீரக்கழலையணிந்த திருவடிகள். ஈசன் எனுங்கனி - ஈசன் என்ற பெயரையுடைய கனி. 'கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி' (தி.9 திருவிசைப்பா.47) முதலிய திருமுறை மேற்கோள்களை எண்ணுக. சாலவும் இனிது - மிகவும் இனியது. ஏசற்றவர்கட்கு - குற்றமற்றவர்கட்கு.