பாடல் எண் :1971
என்னை யேது மறிந்தில னெம்பிரான்
தன்னை நானுமுன் ஏது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலும்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.

8
பொ-ரை: முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம்பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்றுபெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.
கு-ரை: என்னை - அடியேனை. ஏதும் அறிந்திலன் எம்பிரான் - சிறிதும் அறிந்தானில்லை எமது தலைவனாகிய இறைவன் என்றுமாம். சிறிது அறிந்திருந்தானாயின் நான் புறச்சமயச் சூழலிற் சென்று மயங்கும் நிலை ஏற்பட்டிராது என்றதைக் குறித்தது. தன்னை - அப்பெருமான்தன்னை. நானும் - அடியேனும். முன் - இளமைக்காலத்து. ஏதும் - சிறிதும். அறிந்திலேன் - அறியாதொழிந்தேன். என்னைத் தன்னடியான் என்று அறிதலும் - இறைவன் என்னை இவன் நம் அடியவனாதற்குரியான் என்று அறிந்ததும். தன்னை - அப்பெருமானை. பிரான் என்று - தலைவன் என்று.