|
பாடல் எண் :1977 | இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர் பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர் நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும் நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. |
| 5 | பொ-ரை: நமன் தூதுவர்களே! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர்; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல். கு-ரை: இறை - சிறிதும். மறவேல் - மறவாதீர்கள். நமன் தூதுவீர்-இயமனுடைய தூதுவர்களே. தமர் - சுற்றம். நறவம் நாறிய - தேன் நிறைந்த மலரின் மணம் கமழ்கின்ற. நல்நறும் சாந்திலும் - நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைக் காட்டிலும். நிறைய - நிரம்ப. நீறணிவார் எதிர் - திருநீறணிவார் எதிரே. செல்லல் - செல்லாதீர்கள். |
|